தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்கவும் நீளமாகவும் வளரவும் ஆலிவ் ஆயில்!

Print lankayarl.com in மருத்துவம்

ஆரோக்கியமற்ற தலைமுடி, நம் உடல்நலம் கெடுவதை உணர்த்தும் அறிகுறி. குழந்தை முதல் பெரியவர்கள் வரைக்கும் தலைமுடிதான் இன்று ‘தலை’யாயப் பிரச்னை
இதற்கு, செலவும் இல்லாமல், பக்காவிளைவுகளையும் ஏற்படுத்தாத பாரம்பரிய முறைகளைப் பின்பற்றுவது நல்லது.

ஆலிவ் ஆயிலில் வைட்டமின் ஏ, ஈ மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் உள்ளது.

எனவே இந்த எண்ணெய் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு, தலைமுடியும் நன்கு வலிமையடையும்.
ஆலிவ் ஆயில் மிகவும் ஆரோக்கியமான எண்ணெய்களுள் ஒன்று என்பது அனைவருக்கும் தெரியும். இந்த எண்ணெய் உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

முக்கியமாக ஆலிவ் ஆயில் கொண்டு தலைமுடிக்கு பராமரிப்பு கொடுத்தால், முடி நன்கு வலிமையாகவும், அடர்த்தியாகவும், நீளமாகவும் வளர ஆரம்பிக்கும்.
ஆலிவ் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையும் சேர்த்து இளஞ்சூடாக்கி, தலையில் மயிர்க்கால்களில் தடவி விரல்களால் மசாஜ் செய்யவேண்டும்.

ஒரு துண்டை வெந்நீரில் நனைத்துப் பிழிந்து தலையில் நன்றாக இறுக்கிக் கட்டி, அரை மணி நேரத்திற்குப் பிறகு தலைக்குக் குளிக்கவும். தினமும் தொடர்ந்து ஒரு வாரம் செய்துவர, முடி உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். தலைக்குப் புத்துணர்வு கிடைப்பதுடன் முடி வளர்ச்சியையும் தூண்டும்.

குளிர்காலத்தில் தலைமுடியில் வெடிப்புக்கள், வறட்சி என்று முடியே அசிங்கமாக சிக்குடன் காணப்படும்.

இந்த காலத்தில் ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால், முடி மென்மையாகவும், வெடிப்புகளின்றியும் ஆரோக்கியமாக இருக்கும். அதற்கு தினமும் ஆலிவ் ஆயிலை தலைமுடியின் முனை வரை நன்கு படும்படி மசாஜ் செய்ய வேண்டும்.

தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க ஆலிவ் ஆயிலைப் பயன்படுத்தினால் மட்டும் போதாது, நல்ல ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் உணவுப் பழக்கங்களையும் பின்பற்ற வேண்டியது அவசியம்.

குறிப்பாக பாதாம், கடல் உணவு மற்றும் தயிர் போன்றவற்றை அதிகம் சாப்பிடுவதன் மூலம் தலைமுடி ஆரோக்கியமாக வளர்ச்சி அடையும்.